வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
By DIN | Published on : 12th July 2018 07:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி பொட்டிநாயுடு தெரு விரிவு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர், வந்தவாசியில் மருத்துக் கடை வைத்துள்ளார். மாதவன் செவ்வாய்க்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு அவரது வீட்டில் இரும்பு கிரில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 150 கிராம் வெள்ளி நகையை திருடியுள்ளனர். பின்னர், தூங்கிக் கொண்டிருந்த மாதவனின் மனைவி இந்துமதியின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
முன்னதாக, அதே பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஜெய்சங்கர் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றும் முடியாததால், அருகில் உள்ள நஸ்ரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மரக்கதவை தட்டியுள்ளனர். ஆனால், நஸ்ரின் கதவைத் திறக்காததால் மர்ம நபர்கள் திரும்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.