Enable Javscript for better performance
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

    By DIN  |   Published on : 12th July 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஆரணி அருணகிரிசத்திரம் பூங்தோட்டம் பகுதி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 2016 - 2017ஆம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித் துறை மூலமாக ரூ.1.61 கோடியில் புதிதாக 5 வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வகம், நூலகம், அலுவலகம், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கழிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டடங்கள் கட்டப்பட்டன.
    இந்தக் கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்டடங்களை திறந்து வைத்தார். விழாவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
    இதில், அமைச்சர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
    ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும்.
    1, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கணினி வழியில் பயிலும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகின்றன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.500 கோடியில் இணையதள வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்படுகிறது.
    அடுத்த ஆண்டு அனைத்துப் பாடங்களும் புதிய பாடத் திட்டங்களாக மாற்றப்பட உள்ளது. ஆகையால், சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 600 பயிற்சியாளர்களை வரவழைத்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்துகிறது. 
    பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டிலிருந்து 1,000 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்றார்.
    நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் இளவரசு, வட்டாட்சியர் திருமலை, முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.ராமச்சந்திரன், நகர நிர்வாகி பாரி பி.பாபு, நகர ஒன்றியச் செயலர்கள் அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.சம்பத், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai