Enable Javscript for better performance
தெருவில் தேங்கிய கழிவு நீரில் நாற்று நடும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தெருவில் தேங்கிய கழிவு நீரில் நாற்று நடும் போராட்டம்

    By  வந்தவாசி,  |   Published on : 13th July 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே தெருவில் தேங்கிய கழிவு நீரில் பெண்கள் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி சரிவர இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது.
     இதனால் ஆத்திரமடைந்த அந்த நகரைச் சேர்ந்த பெண்கள், முதல் குறுக்குத் தெருவில் தேங்கியிருந்த கழிவுநீரில் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
     தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இதனால் எங்கள் பிள்ளைகள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தெருக்களில் வாகனங்களில் செல்வதற்கும், நடப்பதற்கும் பெரும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சென்னாவரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தெருவில் தேங்கியுள்ள கழிவு நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
     இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸார், சென்னாவரம் ஊராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் கலைந்து சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai