Enable Javscript for better performance
அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்: வலசை ரவிச்சந்திரன் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்: வலசை ரவிச்சந்திரன் பேச்சு

    By DIN  |   Published on : 15th July 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அருந்ததியர் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவரும், முன்னாள் வாரியத் தலைவருமான வலசை ரவிச்சந்திரன் கூறினார்.
    அருந்ததியர் மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.கே.கருணாமூர்த்தி தலைமை வகித்தார்.
    மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணையன், மாவட்டப் பொருளாளர் எம்.சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் பி.சகாதேவன் வரவேற்றார். கட்சியின் நிறுவனர் தலைவரும், முன்னாள் வாரியத் தலைவருமான வலசை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
    அருந்ததியர் இன மக்கள் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகளில் பின்தங்கியுள்ளனர். தமிகத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான அருந்ததியர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் உயர்கல்வி படித்துள்ளனர்.
    எனவே, அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு நெல்லையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் சரியாக இல்லை. இந்த இடத்தை மாற்றி பெரிய இடத்தை தேர்வு செய்து மணிமண்டம் கட்ட வேண்டும்.
    அருந்ததியர் இன மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்த குருசாமி, ஜெகந்நாதன் ஆகியோருக்கு சிலை அமைத்து மணிமண்டபம் கட்டித் தர வேண்டும். அருந்ததியருக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், அருந்ததியர் இன மக்களுக்கு கர்நாடகத்தில் வழங்குவதுபோல, செருப்புத் தைக்கும் தொழிலாளர்களுக்கு இலவச உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். அருந்ததியர் வாழும் பகுதிகளில் சுடுகாடு, சாலை வசதி, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஜி.சுப்பிரமணி, மாநில நிதிச் செயலர் ஆர்.சத்யமூர்த்தி, மாவட்ட இணைச் செயலர் எஸ்.கந்தன், முன்னாள் மாவட்டத் தலைவர் சி.ரவி, மாவட்ட அமைப்பாளர் ஆர்.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai