Enable Javscript for better performance
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

    By DIN  |   Published on : 17th July 2018 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத் தொகை பத்திரம் வைத்துள்ளவர்கள், முதிர்வுத் தொகை பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1997 முதல் 2001 வரை பயனடைந்த பயனாளிகளுக்கு தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகம் மூலம் ரூ.1,500-க்கான வைப்புத்தொகை பத்திரம் பெற்று வழங்கப்பட்டது.
    இந்த பயனாளிகளில் சிலரது வசிப்பிடத்தைக் கண்டறிய இயலாததால், முதிர்வுத் தொகை பெற்று வழங்க இயலாமல் நிலுவையில் உள்ளது. எனவே, இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 1997 முதல் 2001 வரை பயனடைந்த ரூ.1,500-க்கான வைப்புத்தொகை ரசீது வைத்திருப்போர் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2-ஆவது தளம், வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.
    மேலும், விவரங்களுக்கு 04175-233810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேரில் வரும்போது வைப்புத் தொகை பத்திரம் அசல், தமிழ்நாட்டில் வசித்து வருவதற்கான சான்று (பழைய (ம) புதிய குடும்ப அட்டை), பயனடைந்த பெண் குழந்தையின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனடைந்த பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தாயின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
    முதிர்வுத் தொகை பெறுவதற்கு, பயனடைந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவுற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மன வளர்ச்சி குன்றிய பெண் குழந்தையாக இருந்தால் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தகுதியான பயனாளிகள் உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai