Enable Javscript for better performance
காவல் நிலையத்தில் ஆய்வு செய்த போலி பெண் ஆய்வாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வு செய்த போலி பெண் ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு  காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு பெண் காவலர் ஒருவர் வந்தார். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் தண்டபாணியிடம், தான் சென்னையில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிகிறேன் என்றும், ஒரு வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தைப் பார்க்க விரும்புவதாகவும் அந்தப் பெண் கூறினாராம். மேலும், அந்த வழக்குப் புத்தகத்தைக் கொடுக்குமாறும் அவர் கேட்டாராம்.அந்தப் பெண் அணிந்திருந்த சீருடையில் பெயர் வில்லை இல்லாததுடன், கால்களில் ஷூவும் அணியவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த காவலர் தண்டபாணி, உதவி ஆய்வாளர் வரும் வரை காத்திருங்கள் என்றாராம். சிறிது நேரத்தில் வந்த உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், அந்தப் பெண்ணிடம் பேசினாராம்.
    அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் தொடர்ந்து விசாரித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் தானிப்பாடியை அடுத்த சின்னியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கங்கா (24) என்பதும், காவல் ஆய்வாளர் போல நடித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து கங்காவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், கங்கா கூறியதாவது:
    நான் சிறு வயதில் இருந்தே காவல் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல் துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். உடல் தகுதித் தேர்வில் 2 மதிப்பெண்களில் தோல்வி அடைந்தேன்.
    காவல் துறையில் சேராமல்போனது உறவினர்கள், தோழிகளுக்குத் தெரியவந்தால் அவமானம் என்று கருதினேன். எனவே, ஆரணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துவிட்டேன் என்று கூறி உறவினர்களை நம்ப வைத்தேன். பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பேன். அதுபோல, இன்று திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டுக்கு வந்த தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்.
    பேருந்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க காவல் நிலையம் எதிரே பேருந்தை நிறுத்தி இறங்கினேன். பிறகு, காவல் நிலையத்துக்குள் சென்று வழக்குப் பதிவு புத்தகத்தைப் பார்ப்பதுபோன்று நடித்தேன் என்றாராம். இதையடுத்து, கைது செய்யப்பட்ட கங்காவை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தண்டராம்பட்டு போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai