தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார்
By DIN | Published on : 18th July 2018 07:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செய்யாறு அருகே தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ தூசி கே.மோகன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கினார்.
செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளியான இவரது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு மின் கசிவு காரணமாக எரிந்து சேதமடைந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி, 10 கிலோ அரிசி, இலவச வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் வழங்கினார்.
மேலும், எம்எல்ஏ தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம், ஒரு மூட்டை அரிசி, 9, 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெருமாளின் 2 மகள்களுக்கு பள்ளிச் சீருடைகளுக்காக ரூ.2 ஆயிரம், மாணவிகள் இருவருக்கும் புதிதாக பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, தீ விபத்தில் வீட்டை இழந்த பெருமாள் குடும்பத்துக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித் தருவதற்கான நடவடிக்கைகளை எம்எல்ஏ தூசி கே.மோகன் மேற்கொண்டார். நிகழ்ச்சியின்போது, செய்யாறு வட்டாட்சியர் மகேந்திரமணி, மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், கோவிந்தராஜ், ஜி.கோபால், பச்சையப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.