Enable Javscript for better performance
நீர்நிலைகளை அழிப்பதுதான் பசுமை வழித் திட்டமா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி- Dinamani

சுடச்சுட

  

  நீர்நிலைகளை அழிப்பதுதான் பசுமை வழித் திட்டமா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

  By DIN  |   Published on : 18th July 2018 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய  நீர்நிலைகளை அழிப்பதுதான் பசுமை வழித் திட்டமா என்று, சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மையப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
  திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்புப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
  நகரச் செயலர் எம்.சந்திரசேகரன் வரவேற்றார். கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மாவட்டக்குழு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதியைப் பெற்றுக்கொண்டார். பின்னர், கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
  தூத்துக்குடியில் சமூக விரோதிகள் ஊடுருவல் இருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவம் நியாயமானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார்.  அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது நியாயம் என்று பேசிய முதல் மனிதர் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.
  சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களா, துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தவர்களா என்று ரஜினி ஏன் அடையாளம் காட்டவில்லை. தமிழக முட்டை ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தினால் முதல்வருக்கும்,  துணை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியவரும்.
  தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை யாரும் தூண்டிவிட முடியாது. மக்கள் தானாகவே போராட்டம் நடத்துகின்றனர். தமிழக முதல்வருக்குத் தெரியாமல் தூத்துக்குடியில் எப்படி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அப்படியானால் காவல் துறை மீது ஏன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை.
  சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க விவசாயிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும், அவகாச காலத்துக்கு முன்பே நூற்றுக்கணக்கான காவல் துறையினரைக் கொண்டு விவசாயிகள் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
  விவசாய குடும்பப் பெண்களை காவல் துறை மிரட்டுகிறது. திருவண்ணாமலையை மாவட்டம் முழுவதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையெல்லாம் காவல் துறை விசாரிக்காமல், விவசாயிகளைத் தாக்குவதில் மட்டுமே முனைப்புக் காட்டுகிறது.
  பல ஆயிரம் கோடியை செலவு செய்து பசுமை வழிச் சாலை அமைப்பதற்குப் பதிலாக இதே அளவு பணத்தை வைத்து அனைவருக்கும் வீடு வழங்க முடியும். நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியும். மலைகள், மரங்கள், ஏரிகள், கிணறுகளை அழித்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது பசுமை வழித் திட்டமா. இந்தத் திட்டத்தில் பணத்தைக் கொள்ளையடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவே மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருகின்றன என்றார்.
  தொடர்ந்து, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், கே.வாசுகி, எம்.பிரகலநாதன், பி.கண்ணன், பி.செல்வன், கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai