Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்: கருவூலம், கணக்குத் துறை ஆணையர் தகவல- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்: கருவூலம், கணக்குத் துறை ஆணையர் தகவல்

    By DIN  |   Published on : 19th July 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தால், தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கருவூலம், கணக்குத் துறையின் அரசு முதன்மைச் செயலரும், ஆணையருமான 
    தென்காசி சு.ஜவஹர் கூறினார்.
    திருவண்ணாமலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திறனூட்டல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வன அலுவலர் பி.சி.அர்ச்சனா கல்யாணி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரதாப், கருவூலம் மற்றும் கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அரசு முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
    கருவூலத்துறை  மூலம்  மாநிலம் முழுவதுமுள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மூலம் 2017 - 2018ஆம் நிதியாண்டில் ரூ.1,55,824 கோடி வரவினமாகவும், ரூ.1,70,256 கோடி செலவினமாகவும் அரசு நிதி கையாளப்பட்டுள்ளது.
    கருவூலப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.
    இந்தத் திட்டத்தின் மூலம் கருவூலங்கள் அனைத்தும் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படும். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்ப்பிக்க நேரில் வர வேண்ழய சூழல் முற்றிலும் தவிர்க்கப்படும்.
    கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் சேரும் வரை ஒவ்வொரு நிலையையும் ஒளிவு மறைவின்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
    தற்போதுள்ள நடைமுறைப்படி, கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளில் இருந்து 6 முதல் 10 நாள்களுக்குப் பிறகே பட்டியல் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் சென்று சேரும்.
    இந்தத் திட்டம் மூலம் பணியாளர்களின் பணிச் சுமை குறையும். மனிதவள பயன்பாட்டால் நிகழும் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும். இந்தத் திட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
    இந்தத் திட்டம் மூலம் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் அனைவரும் பயனடைவர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 2018ஆம் நிதியாண்டில் ரூ.382.86 கோடி ஓய்வூதியமும், அரசு ஊழியர்களுக்கு ரூ.1,119.04 கோடி ஊதியமும் மாவட்டக் கருவூலம், மாவட்டம் முழுவதுமுள்ள 8 சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
    அரசின் வரவினமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.247.65 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
    முகாமில், வேலூர் மண்டல இணை இயக்குநர் எஸ்.புவனேஸ்வரி, கருவூல அலுவலர் சீமா ஸ்கரியா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai