சந்தவாசல் - படவேடு சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
By DIN | Published on : 19th July 2018 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போளூரை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 20) தொடங்க உள்ளதால், இந்தக் கோயிலுக்குச் செல்லும் சந்தவால் - படவேடு இடையிலான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
படவேடு ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் ஆடி வெள்ளி விழா தொடங்குகிறது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபடுவர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள சந்தவாசல் ஊராட்சி, காங்கரானந்தல் கிராமத்தில் இருந்து படவேடு கோயில் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை உள்ளது. இந்தச் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் அண்மையில் தார்ச் சாலை அமைத்தனர். எனினும், இந்தச் சாலையின் பக்கவாட்டில் மண் அணைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக சாலையில் இருந்து கீழே இறங்கும்போது விபத்து நிகழ்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையின் பக்கவாட்டில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.