பசுமைச் சாலை நிலம் மதிப்பிடும் பணியில் ஈடுபட்ட குட்டி விமானம் மாயம்
By DIN | Published on : 19th July 2018 09:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமைச் சாலைக்கான நிலம் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டிருந்த குட்டி விமானம் செவ்வாய்க்கிழமை மாயமானது.
இதைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதால், கிராம மக்கள் பலர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கான நிலம் அளவீடு செய்யும் பணி, நிலம் மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இந்தப் பணி நடைபெறுகிறது.
இந்தச் சாலையின் மொத்த தொலைவில் அதிகப்படியாக 122 கி.மீ. தொலைவு திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி ஒரு புறமும், நிலம் அளவீடு செய்து முடிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பீட்டை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்கும் பணி மற்றொரு புறமும் நடைபெற்று வருகின்றன.
குட்டி விமானம் மாயம்: குட்டி விமானத்தைப் பயன்படுத்தி நிலத்தில் உள்ள அசையா சொத்துகளான கட்டடங்கள், பாசனக் கிணறுகள், சாகுபடி பயிர்கள், மரங்கள் உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. செங்கம் வட்டம், நரசிங்கநல்லூர் கிராமத்தில் சில தினங்களாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் நிலம் மதிப்பிடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதியில் குட்டி விமானம் பறந்து படம் பிடித்துக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட தொலைவுக்கு கடந்து பறந்த குட்டி விமானம், திடீரென ரிமோட் கன்ட்ரோல் கருவியுடனான கட்டுப்பாட்டை இழந்தது.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ரிமோட் கன்ட்ரோல் கருவி மூலம் குட்டி விமானத்தை திரும்ப அழைத்துப் பார்த்தனர். ஆனால், எவ்வித தொடர்பும் கிடைக்கவில்லை. குட்டி விமானம் எங்கு சென்றது என்று தெரியவில்லை.
புதன்கிழமை மாலை வரை குட்டி விமானம் கிடைக்கவில்லை. எனவே, குட்டி விமானத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்குவதாக பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் பலர் குட்டி விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.