Enable Javscript for better performance
ரஷிய பெண் தங்கியிருந்த விடுதிக்கு "சீல்' வைப்பு: 15 பேரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ரஷிய பெண் தங்கியிருந்த விடுதிக்கு "சீல்' வைப்பு: 15 பேரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 19th July 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான ரஷிய நாட்டுப் பெண் தங்கியிருந்த விடுதியை வருவாய்த் துறையினர் புதன்கிழமை பூட்டி "சீல்' வைத்தனர்.
    இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரிடம் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை ரஷிய தூதரக அதிகாரி டென்னிஸ், நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் பெண்ணின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
    ரஷிய நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண், அண்மையில் திருவண்ணாமலைக்கு வந்தார். ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் வழிபட்ட பிறகு, கடந்த 12-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை - செங்கம் சாலை, கஸ்தூரி நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
    கடந்த திங்கள்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது, அலங்கோலமான நிலையில் அந்தப் பெண் மயங்கியக் கிடந்தது தெரியவந்தது.
    உடனடியாக அவரை ஊழியர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவில்லாமல் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
    இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலூர் சரக டிஐஜி வனிதா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    தூதரக அதிகாரி விசாரணை:  இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தில் நுழைவு இசைவு (விசா) சரிபார்ப்பு அதிகாரியாகப் பணிபுரியும் டென்னிஸ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை வந்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களிடமும், மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜனிடமும் பெண்ணின் உடல் நிலை குறித்து விசாரித்தார். தொடர்ந்து, பெண்ணின் நுழைவு இசைவையும் பார்த்து ஆய்வு செய்துவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
    15 பேரிடம் விசாரணை: இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ரஷிய பெண்ணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி புதன்கிழமை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. 15 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரிக்கிறோம் என்றார்.
    விடுதிக்கு "சீல்' வைப்பு: இதற்கிடையே, ரஷிய பெண் தங்கியிருந்த விடுதி உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை மாலை அந்த விடுதியை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் மனோகரன் பூட்டி "சீல்' வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai