Enable Javscript for better performance
செய்யாறு அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

    By DIN  |   Published on : 20th July 2018 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே 20 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
    செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் தலைமை வகித்தார். உதவி ஆட்சியர்கள் பிரதாப், ஆர்.அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, அரும்பருத்தி கிராம நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 20 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். அப்போது, நரிக்குறவர் காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    இதனைத் தொடர்ந்து, பூம்பூம் மாட்டுக் காலனியில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பள்ளி மாணவர்களிடம் பாடப் புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார். 2-ஆம் வகுப்பு மாணவி மகாலட்சுமி நன்றாக வாசித்ததால், அவருக்கு சந்தன மாலை அணிவித்து பாராட்டினார்.
    தொடர்ந்து, பெரும்பள்ளம் கிராமத்தில் தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த சேகர், மணிகண்டன் ஆகியோர் குடும்பங்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான உத்தரவுகளையும், அதேபோல அந்தப் பகுதியில் வசிக்கும் 5 குடும்பங்களுக்கு பசுமை வீட்டுக்கான உத்தரவுகளையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
    பின்னர், செய்யாறில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மருந்து சேமிப்புக் கிடங்கு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியின்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் பானு, வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai