Enable Javscript for better performance
அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளித் திருவிழா கோலாகலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் முதலாம் ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
    திருவண்ணாமலை - வேலூர் சாலை, மலையடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முதலாம் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு மூலவர் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், ஸ்ரீநாக வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், சிறுவர்களுக்கு மொட்டை அடித்து, காது குத்தியும் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். பக்தர்கள் பலர் ஆடு, கோழிகளைப் பலியிட்டு வழிபட்டனர். 
    இந்தக் கோயிலில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஆடி வெள்ளித் திருவிழா நடைபெறுகிறது.
    சு.பொலக்குணம் கிராமத்தில்...: திருவண்ணாமலையை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 13-ஆவது ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.
    தொடர்ந்து, உற்சவர் வீதியுலா, கூழ் வார்த்தல் திருவிழா ஆகியவை நடைபெற்றன. மேலும், பக்தர் ஒருவரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவற்றைக் கொட்டி உலக்கையால் இடிக்கும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, ஆன்மிக நாடகம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல, செங்கத்தை அடுத்த புதூர் ஸ்ரீமாரியம்மன் கோயில், படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai