திருவண்ணாமலையில் தொல்லியல் கழகம் சார்பில் நடைபெற்ற 2 நாள் கருத்தரங்கு நிறைவு விழாவில் கலை, வரலாறு, ஓவியப் போட்டிகளில் வென்றவர்கள், கல்வெட்டுப் பயிற்சி பெற்றவர்கள், கருத்தரங்க கட்டுரைகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையில் தொல்லியல் கழகத்தின் 28-ஆவது ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் 29 இதழ் வெளியீட்டு விழா சனிக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகமும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து இந்த விழாவை 2 நாள்கள் நடத்தின.
சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, தொல்லியல் கழக துணைத் தலைவர் செந்தீ நடராஜன், தொல்லியல் கழகச் செயலர் சு.ராசவேலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2-ஆவது நாள் விழா:
தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக, கருத்தரங்க நிறைவு விழாவும், பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றன.
விழாவுக்கு பேராசிரியர் ப.சண்முகம் தலைமை வகித்தார். கல்வெட்டுப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சு.ராசகோபால்
முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கலை, வரலாறு, ஓவியப் போட்டிகளில் வென்றவர்கள், கல்வெட்டுப் பயிற்சி பெற்றவர்கள், கருத்தரங்க கட்டுரைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினர். இதையடுத்து நடைபெற்ற தொல்லியல் கழக பொதுக்குழுக் கூட்டத்தில், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், பேராசிரியர் எ.சுப்பராயலு, தொல்லியல் கழகச் செயலர் சு.ராசவேலு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர்
ச.பாலமுருகன், பொருளாளர் மு.கா.மணியரசன், நிர்வாகி சு.சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.