Enable Javscript for better performance
கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 24th July 2018 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, போளூரை அடுத்த கரைப்பூண்டி தனியார் சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போளூரை அடுத்த கரைப்பூண்டி ஊராட்சியில் போளூர் -  சேத்துப்பட்டு சாலை அருகே தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் போளூர், சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆரணி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் 2017 - 2018ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பை கடந்த நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆலைக்கு வெட்டி அனுப்பினர். விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான பணத்தை ஆலை நிர்வாகம் வழங்காமல் கடந்த 8 மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
    இந்த நிலையில், கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சர்க்கரை ஆலை நுழைவாயிலில் பூட்டுப்போட்டு பூட்டி, நிலுவைத்தொகை கிடைக்கும் வரை ஆலை முன் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி கோட்டாட்சியர் (பொறுப்பு) பானு, சர்க்கரை ஆலை பொது மேலாளர் கந்தசாமி, போளூர் டிஎஸ்பி சின்னராஜ், வட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் ஆகஸ்ட் 
    15-ஆம் தேதிக்குள் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், அதிகாரிகள், ஆலை நிர்வாகம் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதுடன், நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக எழுத்துப்பூர்மாக உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூறினர். தொடர்ந்து, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) முத்தரப்புக் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.
    போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மணி தலைமை வகித்தார். செயலர் பாலமுருகன், பொருளாளர் கணேசன் மற்றும் தமிழ்நாடு  கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai