Enable Javscript for better performance
பல் மருத்துவம் படிக்க பணம் இல்லாமல் தவிப்பு: மலைவாழ் மாணவிக்கு ரூ.17 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்த ஆ- Dinamani

சுடச்சுட

    

    பல் மருத்துவம் படிக்க பணம் இல்லாமல் தவிப்பு: மலைவாழ் மாணவிக்கு ரூ.17 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்த ஆட்சியர்!

    By DIN  |   Published on : 25th July 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், போதிய பண வசதி இல்லாமல் தவித்த மலைவாழ் மாணவியின் கல்விச் செலவுக்கான ரூ.17 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
    ஜமுனாமரத்தூர் வட்டம், பட்டன்கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகள் மா.சுமத்திரா. இவர், குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-இல் பிளஸ் 2 முடித்து 973 மதிப்பெண்கள் பெற்றார். மேலும், போளூர் அரசுப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். நீட் தேர்வில் 135 மதிப்பெண்கள் பெற்ற சுமத்திராவுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் கட்டண முறையில் (மேனேஜ்மென்ட் கோட்டா) பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. இந்தப் படிப்பை முடிக்க ரூ.17 லட்சம் வரை செலவாகும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாம்.
    இவ்வளவு பணம் செலவு செய்ய வசதியில்லாததால் வேறு படிப்பை தேர்வு செய்ய சுமத்ரா முடிவு செய்தாராம். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரித்தார்.
    அப்போது, ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்ட முதல் மலைவாழ் மாணவி இவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசு கல்வி உதவித்தொகையாக ரூ.7 லட்சத்து 20 ஆயிரம், சென்னை ஸ்பிக் உர நிறுவனம் மூலம் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 700, சென்னை ரோட்டரி சங்கம் மூலம் ரூ.50 ஆயிரம், திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மூலம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 700-ஐ மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பெற்றுத் தந்தார்.
    இந்தப் பணம் மாணவி மா.சுமத்திரா, கல்லூரிப் பதிவாளர் ஆகியோர் இணைந்த வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவி மா.சுமத்திராவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிக்கு காரில் வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், பயிற்சி ஆட்சியர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai