குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
By வந்தவாசி | Published on : 26th July 2018 09:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசியில் குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், மொத்தம் ரூ.1.42 கோடி செலவில் வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியிலும், வந்தவாசி கே.வி.டி. நகரிலும் குப்பை உரக்கிடங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த இரு இடங்களிலும் உரக்கிடங்கு அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
இதையடுத்து, குப்பை உரக்கிடங்குகளை அமைக்க சுகநதி ஆற்றை ஒட்டிய பகுதி, 4-ஆவது வார்டுக்கு உள்பட்ட கோட்டை அகழியை ஒட்டிய பகுதி, ஐந்து கண் பாலம் அருகில் மயானத்தை ஒட்டிய பகுதி என புதிதாக 3 இடங்களை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்தது.
இதில், கோட்டை அகழியை ஒட்டிய பகுதியில் உரக்கிடங்கு அமைக்க அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். மேலும், குப்பை உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், வட்டாட்சியர் முரளிதரன், டிஎஸ்பி பொற்செழியன், நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சரமசம் செய்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.