Enable Javscript for better performance
குழந்தை பிறந்த அன்றே இணையம் மூலம் பிறப்புச் சான்று: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை பிறந்த அன்றே இணையம் மூலம் பிறப்புச் சான்று: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    By DIN  |   Published on : 27th July 2018 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தை பிறந்த அன்றே இணையதளம் மூலம் பிறப்புச் சான்று வழங்கப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.16 லட்சத்திலான டயாலிஸிஸ் கருவியை மக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். மேலும், புதிதாக கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    விழாவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
    ஆரணிக்கு கடந்த முறை வந்தபோது, அரசு மருத்துவமனையை பார்வையிட்டுச் சென்றேன். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்ததன்பேரில், இந்த மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட ரூ.4.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ரூ.2.10 கோடியில் கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் கட்டி முடிப்பதற்குள் அடுத்த நிதி வந்துவிடும்.
    தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் பார்க்கப்படுகின்றன. இதில், 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் பார்க்கப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுகாதாரத் துறை வெகு சிறப்பாக செயல்படுகிறது. மற்ற மாநில அரசுகள் தமிழகத்தை பின்பற்றி வருகின்றன.
    திருவண்ணாமலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ரூ.28 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ரூ.6 கோடியில் எம்ஆர்ஐ ஸ்கேன் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்படத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சந்தவாசல், புலீயூர் ஆகிய இரண்டு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன.
    திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது. 1,700 மருத்துவர்கள், 4,700 செவிலியர்கள், எம்.எஸ், எம்.டி. முடித்த 676 பேர் 3 ஆண்டு அரசுப் பணி செய்ய வரவுள்ளனர். மருத்துவத் துறையிலுள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தை பிறந்தவுடன் இணையதளம் மூலம் பதிவு செய்வோருக்கு அன்றே பிறப்புச் சான்று வழங்கப்படுகிறது என்றார்.
    விழாவில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.4.60 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததற்காக தமிழக முதல்வருக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் ஆரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
    விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ஏழுமலை, செய்யாறு சுகாதார துணை இயக்குநர் கோவிந்தன், ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் எஸ்.நந்தினி, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai