Enable Javscript for better performance
சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கும் சேத்துப்பட்டு மக்கள்: மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கும் சேத்துப்பட்டு மக்கள்: மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்குமா?

    By DIN  |   Published on : 27th July 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டு பேரூராட்சியில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பையாலும், புதர் மண்டியதால் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீராலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    சேத்துப்பட்டு பேரூராட்சியில் லூர்து நகர், நிர்மலா நகர், பழம்பேட்டை, அருந்ததிபாளையம், கண்ணணூர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர் உள்பட 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சி தமிழக அரசால் தற்போது முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
    24 மணி நேரமும் பேருந்து வசதி கொண்ட சேத்துப்பட்டு பேரூராட்சியில், அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, குடிநீர், சுகாதார வசதிகளை செய்து கொடுப்பதில் பேரூராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
    குறிப்பாக, தெருக்களில் குப்பை அள்ளப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கிறது. தெருக்களில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டும், தூர்ந்தும், செடிகொடிகள் மண்டியும் இருப்பதால், கழிவு நீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழம்பேட்டையில் உள்ள வந்தவாசி சாலை, கொத்தம்பட்டு தெரு, ஒளவையார் தெரு, கடைத் தெரு, மேட்டுத் தெரு, இளங்கோ தெரு, அழகிரி தெரு என ஒட்டுமொத்த தெருக்களின் கழிவு நீரும் கடைத் தெரு, பள்ளத் தெரு வழியாக செட்டிகுளம் சென்றடைகிறது. 
    ஒரு காலத்தில் ஆடு, மாடுகளை குளிப்பாட்டவும், தண்ணீர் குடிக்கவும், பொதுமக்கள் துணி துவைக்கவும் பயன்படுத்தப்பட்ட செட்டிகுளத்தில் தற்போது ஒட்டுமொத்தாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
    சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் களம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி பொறுப்பு அதிகாரியாக செயல்படுவதால், அவரை சந்தித்து அடிப்படை பிரச்னைகள் குறித்து கூற முடிதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அலுவலத்தில் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
    இந்த நிலையில், சேத்துப்பட்டில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து விளக்கம் கேட்க அவரை தொடர்பு கொண்டபோது, தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, சேத்துப்பட்டு பேரூராட்சியில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai