Enable Javscript for better performance
அதிமுக அரசு கல்வியில் புரட்சி செய்து வருகிறது: அமைச்சர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசு கல்வியில் புரட்சி செய்து வருகிறது: அமைச்சர் பேச்சு

    By DIN  |   Published on : 28th July 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்விக்காக ரூ.27ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கல்வியில் புரட்சி செய்து வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், ஆரணி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் ஆரணி, சேவூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கூட்டங்களுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக கழக அமைப்புச் செயலரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பேசியது:
    அதிமுக அரசு கல்விக்காக ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கல்வியில் புரட்சி செய்து வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை.  சுகாதாரத் துறையில் தமழகம் முன்னோடியாக செயல்படுகிறது.    
    ஆரணி மக்களுக்காக ரூ.2.5 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அருகில் திருமண மண்டபம் கட்டப்படவுள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில், ரூ.90 லட்சம் மதிப்பில் பையூர் கூட்டுச்சாலை அருகில் ஒரு திருமண மண்டபம் அமைக்கப்படவுள்ளது.
    மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.ஒரு கோடியில் நடை பயிற்சி மேடை அமைக்கும் பணியும், ரூ.40 லட்சத்தில் இந்திரா காந்தி சிலை முதல் ஆரணி பேருந்து நிலையம் வரை சென்டர் மீடியா லைட் அமைக்கும் பணியும் நடைபெறுகின்றன.
    மேலும், ஆரணி தொகுதிக்காக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம் அமைக்கவும், மைதானம் அருகில் ரூ.50 லட்சத்தில் உடல் பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்றுத் தந்துள்ளார். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறாக ஆரணி தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுள்ளன.
    எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிமுக வெற்றி பெற கட்சியினர் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், கழக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வி.ஏழுமலை, மாவட்ட அவைத் தலைவர் ஜெமினி கே.இராமச்சந்திரன், நகரச் செயலர் எ.அசோக்குமார், ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணி நீலமேகம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மாவட்ட இணைச் செயலர் விமலா மகேந்திரன், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலர் ராகவன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், சேவூர் முன்னாள் தலைவர் பெருமாள், மாவட்ட கைத்தறி பிரிவுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai