Enable Javscript for better performance
5 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஏன்? இணை இயக்குநர் நேரில் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    5 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஏன்? இணை இயக்குநர் நேரில் விசாரணை

    By DIN  |   Published on : 28th July 2018 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் 3 நாள்களில் 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) குப்புசாமி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமையில், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு சில நாள்களாக திடீர் ஆய்வில் ஈடுபட்டது.
    ஆசிரியர்கள் மீது வரப்பெற்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். அப்போது, ஆசிரியர்கள் சிலர் தங்கள் வகுப்புகளுக்கு முறையாகச் செல்லாமல் பள்ளியில் ஓய்வு எடுத்தது, மாணவ, மாணவிகளுக்கு சரியாக பாடங்கள் நடத்தாதது, முதல் இடைப் பருவத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதற்கான பாடங்களை நடத்தாதது, தமிழக அரசு வழங்கியுள்ள கற்பித்தல் துணைக் கருவிகளை பயன்படுத்தாதது, வகுப்பறையில் செல்லிடப்பேசி பயன்படுத்தியது, ஒரே நாளில் 9 பாடங்களை நடத்தியது என பல்வேறு குறைபாடுகள் ஆசிரியர், ஆசிரியைகளிடையே காணப்பட்டதாம்.
    3 நாளில் 5 பேர் பணியிடை நீக்கம்: இவ்வாறான குறைபாடுகள் காணப்பட்ட செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முகமது மைனுதீன், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சம்பத், முருகன், தானிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை கணித பட்டதாரி ஆசிரியர் சாண்டில்யன், இதே பள்ளியின் முதுநிலை ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் தங்கமுருகன் ஆகியோர் கடந்த 3 நாள்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    ஆசிரியர் சங்கங்கள் புகார்: முதன்மைக் கல்வி அலுவலரின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நோக்குடன் நடைபெறுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் வியாழக்கிழமை முறையிட்டனர்.
    இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) குப்புசாமிக்கு உத்தரவிடப்பட்டது. 
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்த குப்புசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரிடம் 5 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்றும், மை சைல்டு மை கேர் திட்டத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.
    இதேபோல, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மீதான புகார்கள் என்னென்ன என்பது குறித்தும், இந்த புகார்களின் உண்மைத்தன்மை குறித்தும் இணை இயக்குநர் குப்புசாமி விசாரணை நடத்தினார்.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரை வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. 
    இந்தச் சூழ்நிலையில் நடைபெற்றுள்ள உயரதிகாரியின் விசாரணை திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai