Enable Javscript for better performance
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு: அரசு, தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு: அரசு, தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 29th July 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இந்திய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த அரசு,
    தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா முழுவதும் இந்திய மருத்துவச் சங்கத்தினர் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பிலும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. மருத்துவர்களின் போராட்டத்துக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் திருவண்ணாமலை கிளைத் தலைவர் கே.சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் ஆர்.கதிரவன், துணைத் தலைவர் மாலதி கவுரிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் டி.ஹேமலதா வரவேற்றார்.
    ஆர்ப்பாட்டத்தில், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த ஆணையம் பொதுமக்கள், மருத்துவர்களை நேரடியாகப் பாதிக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும்.
    இதனால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    நோயாளிகள் அவதி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, தீர்மானிக்கப்பட்ட அவசரமில்லா அறுவைச் சிகிச்சை ஆகியவற்றை மருத்துவர்கள் புறக்கணித்தனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் சனிக்கிழமை சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai