வந்தவாசி அருகே தொழுநோயாளி பெண்ணிடம் பசுமை வீடு ஒப்படைப்பு
By DIN | Published on : 29th July 2018 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசி அருகே தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அதிகாரிகள் மூலம் கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீட்டை அந்தப் பெண்ணிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை ஒப்படைத்தார்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணி (60). இவரது மனைவி மல்லிகா (55). இவர்கள் இருவரும் வந்தவாசி கோட்டை மூலை அருகில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில், கோட்டை அகழியை ஒட்டிய புறம்போக்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மல்லிகா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மல்லிகாவுக்கு நோய் பாதிப்பு அதிகமாகி மோசமான நிலையை அடையவே, மணி வேலைக்கு செல்ல முடியாமல் மல்லிகாவை கவனித்து வந்துள்ளார். இதனால் இருவரும் வறுமையின் பிடியில் சிக்கினர்.
இதையடுத்து, மல்லிகா இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் கடந்த ஜனவரி மாதம் மனு அளித்தார். மனு அளித்த ஒரு வாரத்திலேயே மல்லிகாவுக்கு சளுக்கை ஊராட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாவும், அதில் ரூ.2.10 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவையும் மல்லிகாவின் இருப்பிடத்துக்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். மேலும், மல்லிகா, மணியின் நிலையை கருத்தில்கொண்டு, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளே பசுமை வீட்டை கட்டித்தரவும் நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து, பணிகள் தொடங்கப்பட்டு பசுமை வீடு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீட்டை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை திறந்து வைத்து, மல்லிகாவிடம் ஒப்படைத்தார்.
மேலும், மல்லிகாவுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள், வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். வந்தவாசி வட்டாட்சியர்கள் ஆர்.முரளிதரன், வாசுகி, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், வந்தவாசி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.