மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரதம்
By DIN | Published on : 30th July 2018 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரின் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சி.அ.முருகன் தலைமை வகித்தார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பெ.சங்கர், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகி கு.தமிழ்மணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மு.பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மை சைல்ட் மை கேர் என்ற தலைப்பின் கீழ், ரசீது இல்லாமல் பல லட்சம் பணத்தை வசூல் செய்வதைக் கண்டித்தும், தேர்வு விடைத் தாள்களை விற்று பல லட்சம் மோசடி செய்தது, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களைப் பழி வாங்குவதைக் கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு.மணிமேகலை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம் உள்பட 16 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.