கருகிய மணிலாவுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்
By திருவண்ணாமலை, | Published on : 31st July 2018 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிடப்பட்டு கருகிவிட்ட மணிலாவுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ஜி.புருஷோத்தமன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலர் நார்த்தாம்பூண்டி ஜெ.சிவா உள்ளிட்ட விவசாயிகள் சிலர் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திரண்டனர்.
பின்னர், திடீரென மணிலா பயிருக்கு பாடை கட்டி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
போராட்டம் குறித்து வி.ஜி.புருஷோத்தமன் கூறியதாவது: ஜூன் மாதம் பெய்த மழையை நம்பி திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 4,500 செலவு செய்து மணிலா பயிருகளை விதைத்தனர். தற்போது 40 நாள்களான நிலையில், பூப்பூத்து கருகிவிட்டது. மணிலா மகசூல் உற்பத்தியாகும் நிலையில், மழை பெய்யாததால் சுமார் 2 லட்சம் ஏக்கர் மணிலா பயிர்கள் கருகிவிட்டன.
பெரும்பாலான விவசாயிகள் மணிலா பயிரிடப்பட்ட ஏக்கருக்கு ரூ. 450 -ஐ காப்பீடு செய்துள்ளோம். இந்த காப்பீடு நிவாரணம் பெற மகசூல் இழப்பு கணக்கிடும் பணியில் வேளாண் துறை, புள்ளியியல் துறை ஈடுபட்டு, இழப்பீடு வழங்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.