Enable Javscript for better performance
ஜவ்வாதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கிய 21-ஆவது கோடை விழாவைக் காண மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
    பார்வையாளர்களை கவர்ந்த டைனோசர்: கோடை விழாவில், தோட்டக்கலைத் துறை சார்பில் 500 கிலோ பாகற்காய்களைப் பயன்படுத்தி 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த டைனோசர் பொம்மை, ஜெர்பிரா என்ற 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த டால்பின் மீன்கள், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, கேரட், கத்திரிக்காய் உள்ளிட்ட 250 கிலோ காய்கறிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மயில் கண்காட்சி, மலர்க் கண்காட்சி ஆகியவை மலைவாழ் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்தன.
    இந்தப் பொம்மைகளுக்கு நடுவே நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனர். பலர் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொம்மைகளை வியப்புடன் பார்வையிட்டுச் சென்றனர்.
    சாகச விளையாட்டுகள்: ஜமுனாமரத்தூர் ஏரியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாட்டர் வாக்கிங் பால், ரிவர் கிராசிங், கமாண்டோ நெட், பர்மா பிரிட்ஜ் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஜமுனாமரத்தூர் ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில் மிதிவண்டி படகுப்போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றன.
    உள்ளூர் சந்தை: இதுதவிர, ஜவ்வாதுமலையில் வசிக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயிர்கள், பொருள்களின் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் சென்றனர்.
    கண்காட்சி அரங்குகள்: மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும் கோடை விழாவில் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்குகளில் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டன.
    2 நாள்களும் தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாத் துறையினருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai