11 நாள்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து தண்டராம்பட்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டு அருகே 11 நாள்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு அருகே 11 நாள்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டை அடுத்த கொளமஞ்சனூர் கிராமத்தில் உள்ள பிக்கப் அணைக்கட்டு பகுதியில் இருந்து திருவண்ணாமலை நகராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் இருந்து கொளமஞ்சனூர், கீழ்ராவந்தவாடி, தண்டராம்பட்டு, ராதாபுரம், கீழ்சிறுப்பாக்கம், கீழ்செட்டிப்பட்டு, மேல்செட்டிப்பட்டு, நல்லவன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11 நாள்களாக ராதாபுரம், கீழ்சிறுப்பாக்கம் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, நல்லவன்பாளையம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வழங்க இயலவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனராம்.
11 நாள்களாகியும் குடிநீர் குழாய் சரிசெய்யப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ராதாபுரம் கிராம மக்கள், பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியே சென்ற அரசு, தனியார் பேருந்துகளையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை புறநகர் டிஎஸ்பி பழனி, தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி, ஊராட்சிச் செயலர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொளமஞ்சனூர், தண்டராம்பட்டு, ராதாபுரம், கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சிகள் 2 ஆண்டுகளாகவும், நல்லவன்பாளையம், கீழ்செட்டிப்பட்டு, மேல்செட்டிப்பட்டு ஊராட்சிகளுக்கு 15 ஆண்டுகளாகவும் குடிநீர் வரி செலுத்தவில்லை. வரி செலுத்தினால் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி பழனி உறுதியளித்தார். 
இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com