செய்யாறில் 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகள்: பொதுமக்கள் அவதி

செய்யாறு நகராட்சியில் தெருக்களில் உள்ள சாலைகள் 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில்

செய்யாறு நகராட்சியில் தெருக்களில் உள்ள சாலைகள் 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளதால், இந்தச் சாலைகளில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
திருவண்ணாமலை  மாவட்டத்தில் இரண்டாவது வருவாய்க் கோட்டமாக உள்ளது செய்யாறு.  செய்யாறு நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக கடந்த ஆண்டு ரூ.13.43 கோடியில் புதிய கிணறு, குடிநீர்த் தொட்டி (செம்ப்), தெருக்களில் புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததை அடுத்த தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செய்யாறு நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள தெருக்களில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்காக புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. 
புதிய குழாய்கள் அமைக்க தெருக்களில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை.
இதனால், முக்கியச் சாலைகளான பங்களா தெரு, வைத்தியர் தெரு, பழைய மருத்துவமனை தெரு உள்ளிட்ட பல தெருக்களில் நடந்து செல்பவர்களும், சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வோரும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
தெருக்களில் உள்ள சாலைகளில் பெரும்பாலான பகுதிகள் மேடு பள்ளங்களாக இருந்து வருவதால், அந்தப் பகுதி வழியாக செல்பவர்கள் எதிரில் வாகனங்கள் வந்தால் ஒதுங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி 27 வார்டுகளில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட தெருக்களில் புதிதாக தார்ச் சாலைகள் அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

"அரசுக்கு திட்ட மதிப்பீடு  அனுப்பப்பட்டுள்ளது'
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: 
நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி முழுமை அடைவதற்கான கால அவகாசம் இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளன. 
நகராட்சிப் பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ், புதிதாக சாலைகள் அமைத்திட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
அரசு திட்ட மதிப்பீட்டை அறிவித்தவுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com