8 வழிச் சாலைக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் மனு

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சேபனை மனுக்களின் மீதான விசாரணையின்போது, 8 வழிச் சாலைக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் மனு அளித்தனர்.

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சேபனை மனுக்களின் மீதான விசாரணையின்போது, 8 வழிச் சாலைக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் மனு அளித்தனர்.
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் நில அளவீடு செய்யப்பட்டது. அப்போது, விவசாய நிலங்களில் அளவீடு செய்யப்பட்டதை எதிர்த்து விவசாயிகள், விவசாய அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போரட்டங்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், 8 வழிச் சாலைக்கு தங்கள் நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் 8 வழிச் சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் ஆட்சேபனை மனு அளித்தனர்.
இதில், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அரியப்பாடி, இஞ்சிமேடு, மகாதேவிமங்கலம், நம்பேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனு அளித்தனர். இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணைக்கு வருமாறு வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு 
கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, விவசாயிகள் ஆஜராகினர். தொடர்ந்து, 8 வழிச் சாலை நில எடுப்பு மாவட்ட தனி வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையிலான அதிகாரிகள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தை தர மறுத்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் அபிராமன் தலைமையிலான குழுவினர் விவசாயிகளுடன் இருந்தனர்.
பின்னர், விசாரணைக்கு ஆஜரான விவசாயிகள் கூறியதாவது: 8 வழிச் சாலைத் திட்டம் தேவையற்றது. 
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்க நினைப்பது வேதனை அளிக்கிறது. எனவே, எங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை தரமாட்டோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com