ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில்  ரயில்வே  துறையில் வேலை வாங்கித் தருவதாக 34 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை பாதிக்கப்பட்டோர்  பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில்  ரயில்வே  துறையில் வேலை வாங்கித் தருவதாக 34 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை பாதிக்கப்பட்டோர்  பிடித்து காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
சேத்துப்பட்டை அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசாச்சாரியார் மகன் ராகவாச்சாரியார் என்ற ராகவன் (45) (படம்). இவர், கோயில் அர்ச்சகராக உள்ளார். இவருக்கு வேலூர் விரிஞ்சிபுரம் நாகராஜ், மணி, மகேந்திரன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் தாங்கள் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கான ஆள்களை பிடித்துக் கொடுக்குமாறும் ராகவனிடம் அவர்கள் கூறினராம்.
தொடர்ந்து, விரிஞ்சிபுரம் நாகராஜ், மணி, மகேந்திரன் ஆகியோர் மூலமாக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, ஆரணி, கலவை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் ராகவன் பணம் வாங்கினாராம்.
இவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் திருச்சியில் உதவிப் பொறியாளராக வேலை பார்க்கும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சகாதேவன் முன்னிலையில், விண்ணப்பப் படிவங்களை அளித்து பூர்த்தி செய்து பெற்றனராம். இதைத் தொடர்ந்து, பணிக்கான உத்தரவு வராததால், பணம் கொடுத்தவர்கள் ராகவனிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், ராகவன் அவர்களை கடந்த ஓராண்டாக ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை எஸ்.பி., போளூர் டிஎஸ்பி, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் ஆகியோரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தனர். போலீஸாரும் ராகவனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சேத்துப்பட்டு கடைத் தெருவில் காரில் வந்த ராகவனை அந்தப் பகுதி மக்கள் பிடித்து, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, போலீஸாரிடம் ராகவன், தான் பெற்ற பணம் முழுவதும் ரயில்வே உதவிப் பொறியாளரான சகாதேவன், விருஞ்சிபுரம் நாகராஜ், மணி, மகேந்திரன் ஆகியோர் வசம் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திரும்பப் பெற்று தருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ராணி, உதவி ஆய்வாளர் (பொ) அசோக்குமார் ஆகியோர் கூறுகையில், ராகவன் ரூ.10 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளதால், அவரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர். மேலும், பாதிக்கப்பட்டோர் அளித்த புகார் மனுக்களை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com