ஏ.டி.எம். மையத்தில் உதவுவது போல நடித்துமுதியவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.50 ஆயிரம் நூதனத் திருட்டு

செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் உதவுவதுபோல நடித்து முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.50


செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் உதவுவதுபோல நடித்து முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜின்னா(60). இவர், வெள்ளிக்கிழமை இரவு செய்யாறு காசிக்காரத் தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் அவரது ஏ.டிஎம். அட்டை வேலை செய்யாததால், அவருக்கு பின்னால் நின்றிருந்த மர்ம நபர்கள் 4 பேரில் ஒருவர் ஏ.டி.எம். அட்டையை வாங்கி இயந்திரத்தில் செலுத்தியபோது, அது வேலை செய்ததாக தெரிகிறது.
உடனடியாக ஜின்னாவிடம் ஏ.டி.எம். அட்டைக்கான ரகசிய எண்ணை மர்ம நபர் கேட்டபோது, ஜின்னா கூற மறுத்ததுடன், தானாகவே ரகசிய எண்ணை உள்ளீடு (டைப்) செய்துள்ளார்.
இருந்த போதிலும், ரகசிய எண்ணை மர்ம நபர் கவனித்ததுடன், ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து வந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்து ஜின்னாவிடம் கொடுத்துவிட்டு, ஏ.டி.எம். அட்டையை மாற்றிக்கொடுத்தாகத் தெரிகிறது. இதனைக் கவனிக்காமல் வாங்கிக்கொண்டு ஜின்னா வீட்டுக்குச் சென்றாராம்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு ஜின்னாவின் செல்லிடப்பேசிக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜின்னா, ஏ.டி.எம். அட்டையை எடுத்துப் பார்த்த பிறகே அது தன்னுடையது இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்த ஜின்னா, ஏ.டி.எம். அட்டையை செயலிழக்கச் செய்தார். பின்னர், செய்யாறு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் லட்சுமி (63). இதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயா (63). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றனர். ஜெயா ஏ.டி.எம். மையத்தின் வெளியே இருக்க, லட்சுமி பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்தினுள் சென்றார்.
அப்போது, அங்கிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபரிடம் ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துத் தருமாறு கூறி, தனது ஏ.டி.எம். அட்டையை லட்சுமி கொடுத்துள்ளார். இதையடுத்து, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்த அந்த நபர், ரூ.2 ஆயிரம் பணம், ஏ.டி.எம். அட்டை, பணம் எடுத்ததற்கான ரசீது ஆகியவற்றை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாராம்.
அந்த நபர் கொடுத்த ரசீதை பார்த்தபோது, தனது வங்கிக் கணக்கிலிருந்து அதிகமாக பணம் எடுக்கப்பட்டிருப்பதாக லட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வங்கியினுள் சென்று விசாரித்தபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என அடுத்தடுத்து இருமுறை பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.
அப்போதுதான் தன்னை அந்த நபர் ஏமாற்றி ரூ.20 ஆயிரம் எடுத்துச் சென்றது லட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com