கேட்டதெல்லாம் கிடைக்கும்!

மனிதர்களின் கவனத்தை ஈர்க்க ஆயிரமாயிரம் ஊடகங்கள் புதிது புதிதாக வந்தாலும், புத்தகங்களுக்கான கவர்ச்சி - ஈர்ப்பு- என்னவோ இன்னும் குறையாமல்தான்இருக்கிறது.
கேட்டதெல்லாம் கிடைக்கும்!

மனிதர்களின் கவனத்தை ஈர்க்க ஆயிரமாயிரம் ஊடகங்கள் புதிது புதிதாக வந்தாலும், புத்தகங்களுக்கான கவர்ச்சி - ஈர்ப்பு - என்னவோ இன்னும் குறையாமல்தான்இருக்கிறது. அதுவும் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள், இதழ்களைத் தேடி அலைபவர்கள் ஏராளம்.அப்படிப்பட்டவர்கள் சென்று மகிழவேண்டிய ஓர் இடம் உள்ளது. சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ஒரு வீடுதான் அது. அங்கே வசிக்கும் கோவிந்தராஜுவை சந்தித்தால் போதும்.  அவரிடம் பழங்கால  புத்தகங்கள், விளம்பரங்கள், சினிமா  செய்திகள், விமர்சனங்கள் அனைத்தும் கிடைக்கும். கோவிந்தராஜுவுக்கு வயது எண்பத்திரண்டு. இன்றைக்கும் பழைய புத்தகங்களைக் கண்டுவிட்டால் குழந்தை போல் அள்ளிக் கொள்வார். கேட்கிறவர் கேட்கும் விலையையும் தந்து பெற்றுக் கொள்வார். புத்தகம் குறித்த  ஆர்வம்  புத்தகங்கள்  பற்றி சொல்வதிலும் அவருக்கு இருக்கிறது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""எனது அப்பா  டாக்டராக இருந்தார். அவர்  புத்தக  ஆர்வலர்.  பணம் கொடுத்து வாங்கிய நூல்களை வீட்டில் பாதுகாத்து வந்தார். அவரிடமிருந்துதான்  எனக்கு பழைய புத்தகங்களை  சேகரிக்க வேண்டும்  என்ற  ஆர்வம்  வந்தது.  நான் சட்டம்,  தொழிலாளர் நலம் குறித்த  முது நிலை படிப்பு படித்தவன்.  இந்தப் பாடம் குறித்து  வகுப்புகளையும் எடுத்து வந்தேன். ஆயினும்  பழைய புத்தகங்கள், விளம்பரங்கள், சினிமா குறிப்புகள், தமிழ் பத்திரிகைகள் சேகரித்து வைப்பது  எனது ரத்தத்தில்  கலந்து விட்டது. இது  இன்று நேற்று தொடங்கியதில்லை. 1958- இல்  தொடங்கியது.

சென்னையில்  பழைய  புத்தகங்களை சேகரிக்க  பழைய  புத்தகங்களை எடைக்கு வாங்கும்  கடைகளுக்கு  தொடர்ந்து  போய்க் கொண்டிருப்பேன். பிடித்தவற்றை  விலை கொடுத்து வாங்கிக் கொள்வேன்.  அந்தத்  தொடர்பு இன்றைக்கும் நீடிக்கிறது.  பழைய புத்தகங்கள் அவர்களுக்கு கிடைத்தால்  அது குறித்த விவரங்களை போனில்  என்னிடம் சொல்வார்கள்.  எனக்குத் தேவை என்றால்  கொண்டு   வரச் சொல்வேன். அவர்கள் கேட்கிற  விலையைத் தந்துவிடுவேன். அதுபோன்று   என்னிடம்  "இந்த  புத்தகம் இருக்கிறதா... நேரு பற்றிய  குறிப்புகள்    உள்ளதா ...  இந்த  வார  இதழ்   இருக்கிறதா..

1960 -இல்  வெளியிட்ட  தீபாவளி மலர்  இருக்கிறதா...   பத்திரிகையில் முதன் முதலில் தொடராக வெளிவந்த  "பொன்னியின் செல்வன்' தொகுப்பு கிடைக்குமா? என்று  வருபவர்களுக்கு  அவற்றைத் தந்து  அதற்கான   விலையைப் பெற்றுக் கொள்கிறேன்.

ஒரு முறை  சென்னையை சேர்ந்த பஸ் நிறுவனம்  குறித்து   நூல் ஒன்று எழுத வேண்டும் என்று ஒரு எழுத்தாளர் வந்தார். அந்த நிறுவனம் அறுபதுகளிலிருந்து வெளியிட்ட விளம்பரங்கள் தேவை என்றார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அத்தகைய விளம்பரங்கள்  அவற்றை வெளியிட்ட நிறுவனத்திடமே இல்லையாம்.  நான் எனது  குவியல்களில்  பல நாட்கள் தேடிப் பிடித்துக் கொடுத்தேன்.  பல அரிய  புத்தகங்கள் என்னிடம் இருப்பதால்  எனது சேகரிப்பிற்கு  "ரேர் புக்ஸ்'  என்று  பெயர் வைத்திருக்கிறேன்.

சென்னையிலிருந்து  வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழின் 1940 முதல் 1958 வரை உள்ள அனைத்து இதழ்களும் கிடைத்தன. நாற்பதாயிரம் கொடுத்து வாங்கினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  இதை ஒரு முதலீடாகவும் ஒரு பொழுதுபோக்காகவும் செய்து வருகிறேன். அதேபோன்று சென்னையில் வின்சென்ட் என்று ஒரு நண்பர்  இருக்கிறார்.  அவருக்கும்  என்னைப் போலவே பழைய புத்தகங்கள் என்றால் காதல்.  அவருக்கு  என்னிடம்  இருந்த பதிமூன்று டன் பழைய  புத்தகங்களை விற்றேன்.. ஒருமுறை நூல் கண்காட்சியில் என்னிடம் உள்ள பழைய  நூல்களை  விற்க   சுமார் எண்பதாயிரம்  கிடைத்தது. அகில உலக  கார்ட்டூன்  திரட்டு என்னிடம் இருந்தது. அதில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது வெளிநாட்டு இதழ்களில் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களும்  அடக்கம்.  அவற்றை  "கேஷவ்'   என்ற கார்ட்டூனிஸ்ட் அப்படியே விலைக்கு வாங்கிக் கொண்டார்.  1933  வாக்கில் காந்திஜி வெளியிட்ட   "ஹரிஜன்'   இதழ்  தொகுப்பு கூட  என்னிடம் பத்திரமாக உள்ளது. "நாடோடி மன்னன்'   படம்  1958 - இல் வெளியானபோது  எம்ஜிஆர் வெளியிட்ட விளம்பரத்தை நான் சேகரித்து வைத்துள்ளேன். 

இன்றைய தலைமுறையினருக்கு  விதம் விதமாக சாப்பிட வேண்டும்...  நல்லா பொழுது போக்கணும்  என்று விரும்புகிறார்கள். ஒருநாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்கும் பழக்கம் இருக்கணும். அதை மறந்துவிடுகிறார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை என் மனைவி இந்தப் புத்தகச் சேகரிப்பு குறித்து விமர்சிப்பதில்லை. அவர் போட்டிருக்கும் ஒரே நிபந்தனை... பழைய குவியல்களை வீட்டுக்குள் வைக்கக் கூடாது. அதனால், கார் நிறுத்தும் இடத்தை எனது புத்தகக் கருவூலமாக மாற்றியிருக்கிறேன்.  இந்த வாசத்திற்கு  புத்தகங்களை அரிக்கும்  பூச்சிகள் வராது'' என்கிறார்  பழைய  புத்தகங்களை நேசிக்கும்  கோவிந்தராஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com