திருவண்ணாமலை மாவட்டத்தில் 128 தேர்வு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 33 ஆயிரத்து 516 பேர் எழுதினர்.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கின. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தேர்வு எழுத 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் தேர்வை திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 721 பேர், செங்கம் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 872 பேர், போளூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 81 பேர், ஆரணி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 945 பேர், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 897 பேர் என மொத்தம் 33 ஆயிரத்து 516 பேர் எழுதினர். தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 33 ஆயிரத்து 988 பேரில் 472 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதிகாரிகள் ஆய்வு: தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மற்றும் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்வு முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க சுமார் 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன.
தொடர்ந்து, வரும் மார்ச் 29-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.