பறிமுதல் செய்யப்பட்ட ரூ.77 லட்சம் திருப்பி அளிப்பு
By DIN | Published On : 04th April 2019 09:52 AM | Last Updated : 04th April 2019 09:52 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.77 லட்சம், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைகள் மூலம் ரூ.77 லட்சத்து 27 ஆயிரத்து 111 ரொக்கமும், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.49 லட்சத்து 87 ஆயிரத்து 470 ரொக்கமும் என மொத்தம் ரூ. ஒரு கோடியே 27 லட்சத்து 14 ஆயிரத்து 581 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை ரூ.77 லட்சத்து 21 ஆயிரத்து 792 திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பிக்காதவர்களின் பணம் ரூ.49 லட்சத்து 92 ஆயிரத்து 789 விசாரணையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.