சுடச்சுட

  

  கிரிவலத்துக்கு இடையூறு இன்றி வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு

  By DIN  |   Published on : 16th April 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், கிரிவலம் செல்லும் பக்தர்களை பாதிக்காதவாறு வாக்குப் பதிவு இயந்திங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
  இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
  திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 மையங்கள், திருவண்ணாமலையில் 11, கீழ்பென்னாத்தூரில் 13, கலசப்பாக்கத்தில் 11, போளூரில் 10, ஆரணியில் 11, செய்யாறில் 10, வந்தவாசியில் 12 என மொத்தம் 93 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
  இந்த மையங்களுக்கு 4 மத்திய பாதுகாப்புப் படையினருடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்படும். வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க 192 நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின் போது ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 52 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  பாதுகாப்புப் பணியில் 6,201 பேர்: தேர்தல் பாதுகாப்புப் பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1,646 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு காவலர்கள் 261 பேர், மத்திய பாதுகாப்புப் படையினர் 320 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 146 பேர், பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் 3 பேர், பயிற்சி காவலர்கள் 428 பேர், வனத் துறையினர் 5 பேர், தீயணைப்புத் துறையினர் 24 பேர், ஓய்வு பெற்ற காவல் துறையினர் 15 பேர், முன்னாள் ராணுவத்தினர் 2,077 பேர், ஊர்க்காவல் படையினர் 310 பேர், என்எஸ்எஸ் மாணவர்கள் 944 பேர், என்சிசி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 6,201 பேர் ஈடுபடுகின்றனர்.
  184 பேர் மீது வழக்கு: தேர்தல் நேரத்தில் பிரச்னை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்ட 184 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டாட்சியர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் 181 பேர் அமைதியைப் பேணுவோம் என்று நன்னடத்தைப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
  16 வழக்குகள் பதிவு: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழக முதல்வரையோ, பிரதமரையோ அவதூறாகப் பேசியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
  கிரிவலப் பாதை மையங்களுக்கு சிறப்பு ஏற்பாடு: மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி தொடங்குகிறது. அப்போது, சுமார் 7 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் வாக்குப் பதிவு முடிந்தவுடன் கிரிவலப் பாதை, திருவண்ணாமலை நகரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாகவும், கிரிவல பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  கிரிவலப் பாதையில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்ட வாகனம் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே கிரிவலப் பாதையில் பயணித்து பின்னர் மாற்றுப் பாதை வழியாக திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வந்துவிடும்.
  ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியையொட்டி, பக்தர்களை பாதிக்காதவாறு  பள்ளியின் பின்பக்கமாக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  தகவல் தெரிவிக்க அழைப்பு:  மக்களவைத் தேர்தல் நேரத்தில் பொதுமக்களை மிரட்டியோ, வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்கள் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கோ, தனிப்பட்ட ஒரு நபருக்கோ வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், தேர்தல் தொடர்பான மற்ற பிரச்னைகள் குறித்து 04175 - 233234, 233633 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
  கள்ள வாக்கு போட வந்து பிடிபட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171-ஏ முதல் ஐ வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர். இந்த பிரிவுகளின் கீழான குற்றத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai