சுடச்சுட

  

  விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி  சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

  By DIN  |   Published on : 16th April 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போளூரை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி, போளூர் - சேத்துப்பட்டு சாலையில் சடலத்துடன் உறவினர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
  போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் காந்தி (25). இவர், சொந்தமாக லாரி வைத்து செங்கல் வியாபாரம் செய்து வந்தார். 
  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை காந்தி தனது இரு சக்கர வாகனத்தில் புலிவானந்தல் கிராமத்தில் இருந்து வியாபார விஷயமாக போளூரை அடுத்த அத்திமூர் கிராமத்துக்குச் சென்றாராம்.
  போளூர் அரசு மருத்துவமனை எதிரே சென்ற போது, மாம்பட்டு கிராமப் பகுதியில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி வந்த பெலாசூர் கிராமத்தைச் சேர்ந்த மணி,  எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது பொக்லைன் இயந்திரத்தை மோதியதாகத் தெரிகிறது.
  இந்த விபத்தில் பைக்கில் சென்ற காந்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 
  பின்னர், உடல் கூறாய்வு செய்யப்பட்டு காந்தியின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
  இந்த நிலையில், பொக்லைன் இயந்திர ஓட்டுநர் மணியைக் கைது செய்யக் கோரி, கொம்மனந்தல் கிராமத்தில் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் காந்தியின் சடலத்தை வைத்து உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. வனிதா, எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி மற்றும் ஆயுதப் படை போலீஸார் அங்கு வந்து, சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
  இந்த மறியலால் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai