சுடச்சுட

  

  ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியம் உயர்த்தப்படும்: கே.எஸ்.அழகிரி

  By DIN  |   Published on : 17th April 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்று அந்தக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
  ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
  நாட்டு மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து, அதற்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள கும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தால் சமூக நலத் திட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
  கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான வேலை நாள்களை 150 நாள்களாக அதிகரிக்கவும், அதற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் வியாபாரிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துள்ளது. எனவே, ஜாதி, மதம், பிரிவினைவாதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது, தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். வேட்பாளர் விஷ்ணுபிரசாத், செய்யாறு தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தபோது, இந்தப் பகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவருக்கு மீண்டும் மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளித்தால், ஆரணி தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துவார் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai