உங்கள் வாக்கை வெறொருவர் செலுத்தியிருந்தால் என்ன செய்வது? மாவட்டத் தேர்தல் அலுவலர் விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்களிக்கச் செல்லும்போது, ஏற்கெனவே உங்களது வாக்கை வேறொருவர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்களிக்கச் செல்லும்போது, ஏற்கெனவே உங்களது வாக்கை வேறொருவர் செலுத்தி இருந்தால், வாக்குக்கு உரியவர் எப்படி வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவது என்பது குறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பணியில் சுமார் 15,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். வாக்காளர்களை எவ்வாறு வாக்களிக்க அனுமதிப்பது, வாக்காளர்களுக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் விவிபாட் கருவி, இந்தத் தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவியை வாக்குச் சாவடி அலுவலர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் 50 மாதிரி வாக்குகளை பதிவு செய்து, வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் சரியான வேட்பாளருக்குத்தான் செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காலை 6 மணிக்கெல்லாம் மாதிரி வாக்குப் பதிவை தொடங்கி சரிபார்த்தால்தான், வாக்காளர்கள் காலை 7 மணிக்கு தங்களது முதல் வாக்கை செலுத்த முடியும். இதில், தாமதம் ஏற்படாமல் வாக்குச் சாவடி அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மாதிரி வாக்குப் பதிவு முடிந்தபிறகு மாதிரி வாக்குகளை அழித்துவிட வேண்டும். 
3-ஆவது வரிசை: இந்தத் தேர்தலில் முதல் முறையாக ஆண்கள் வரிசை, பெண்கள் வரிசைக்கு அடுத்தபடியாக 3-ஆவதாக ஒரு வரிசை அமைக்கப்படுகிறது. இந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நிற்கலாம். இந்த வரிசையை வாக்குச் சாவடி அலுவலர்கள் முறைப்படுத்த வேண்டும்.
இணையதள கேமரா: திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 980 வாக்குச் சாவடிகளில் இணையதள கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேமராக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, வாக்குப் பதிவு மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
12 வகையான ஆவணங்கள்: மாவட்ட நிர்வாகம் சார்பில், வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி அடையாளச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்குப் புத்தகம் உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
சவால் (சேலஞ்ச்) வாக்கு: வாக்குப் பதிவு மையத்தில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களில் ஒருவர், வாக்களிக்க வரும் வாக்காளர் மீது சந்தேகம் எழுப்பினால் அந்த சவாலை வாக்காளர் எதிர்கொள்ளலாம். இதுபோன்ற சூழலில் வாக்காளர் வாக்குச் சாவடி அலுவலரிடம் ரூ.2 செலுத்த வேண்டும்.
வாக்குச் சாவடி அலுவலர் பணத்தை பெற்றுக்கொண்டு, வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஆவணங்களும் சரியாக இருந்து மற்ற முகவர்கள் வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று கூறினால், ரூ.2-ஐ அரசுக்கு செலுத்திவிட்டு, அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்கலாம். ஆனால், வாக்காளர் தவறான தகவல் அளித்து வாக்களிக்க வந்திருந்தால், உடனடியாக அவரை காவல் துறையிடம் ஒப்படைக்கும் பணியில் வாக்குச் சாவடி அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.
வேறொருவர் செலுத்தி இருந்தால்...?: ஒரு வாக்காளர் வாக்களிக்குச் செல்லும்போது, அவரது வாக்கை வேறொருவர் செலுத்தி இருந்தால், அந்த வாக்காளர் வாக்களிக்காமல் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வாக்குக்கு உரிமையானவர் நான்தான் என்று வாக்காளர் ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும். இதை வாக்குச் சாவடியில் அமர்ந்திருக்கும் முகவர்களும் ஒப்புக்கொள்வார்கள்.
இப்படி சூழல் ஏற்பட்டால், அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். முன்னேற்பாடாக வைத்துள்ள பழைய முறையிலான வாக்குச் சீட்டு வாக்காளரிடம் அளிக்கப்பட்டு, முத்திரையிட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இந்த வாக்கு ஒரு வேட்பாளரின் வெற்றி, தோல்விக்குப் பயன்படாது. ஜனநாயகக் கடமையாற்ற வந்த வாக்காளர், வாக்களிக்காமல் திரும்பிச் செல்லக்கூடாது என்பதற்காக இந்த அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com