குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 21st April 2019 12:47 AM | Last Updated : 21st April 2019 12:47 AM | அ+அ அ- |

சோளிங்கரை அடுத்த பாராஞ்சி பகுதியில் குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இந்த கிராமத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றப்படுவது இல்லை. மேலும் குடிநீர்க் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து இருந்ததால் கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான குடிநீர்த் தொட்டிகளும் பயனற்றுப் போய் விட்டன.
குடிநீர் விநியோகம் செய்யக் கோரி கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி இக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில நாள்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டபோதிலும், மீண்டும் குடிநீர் விநியோகம் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாராஞ்சி கிராம மக்கள் அங்குள்ள அம்பேத்கர் மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் சனிக்கிழமை சோளிங்கர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அச்சாலையில் வாகனங்கள் இருபக்கமும் தேங்கி நின்றன.
தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பின் அச்சாலையில் வாகனப் போக்குவரத்து சீரானது.
இதனிடையே, அதிகாரிகளின் உத்தரவுப்படி பாராஞ்சி கிராமத்தில் குடிநீர் விநியோகக் குழாய்கள் சீரமைக்கப்படும் பணிகள் சனிக்கிழமை மாலை தொடங்கின. மேலும் ஆழ்துளைக் கிணறு பழுதுபார்க்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றும் பணியும் தொடங்கியது.