ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 23rd April 2019 10:11 AM | Last Updated : 23rd April 2019 10:11 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) காலை முதல் இரவு வரை பல்வேறு ஹோமங்கள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 2-ஆம் கால சாலைப் பூஜை, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, கோயில் கோபுர கலசங்கங்கள், மூலவர் சன்னதிகளுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனர். இந்த விழாவில், மங்கலம் புதூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.