சென்னைக்கு இயக்க முயன்ற தனியார் பேருந்து தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 04th August 2019 12:42 AM | Last Updated : 04th August 2019 12:42 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை தொடங்கப்பட்ட தனியார் பேருந்து சேவை தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனம் சார்பில் சனிக்கிழமை பேருந்து சேவை தொடங்கப்பட்டது. தகவலறிந்த அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் விரைந்து வந்து பேருந்தை இயக்க விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து, தனியார் பேருந்து நிறுவன ஊழியர்களுக்கும், அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவண்ணாமலை நகர போலீஸார் வந்து தனியார் பேருந்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, திருவண்ணாமலை-சென்னை இடையே தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து, தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.