செங்கம் பகுதியில் செங்கல் சூளைக்காக பனை மரங்கள் அழிக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

செங்கம் பகுதியில் செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழைவளம்

செங்கம் பகுதியில் செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழைவளம்  குறைவு காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
செங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் செங்கல் சூளை தொழில் ஆகும். 
பேரூராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்தச் சூளைகளில் பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. 
செங்கல் சூளை மண் தேவைக்காக, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விவசாய நிலத்துக்கு வண்டல் மண் எடுப்பதாகக் கூறி சிலர் செம்மண்ணை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். 
இதனால் செங்கம் செய்யாற்றங்கரை, கால்வாய், ஏரி, மலை அடிவாரம் என பல்வேறு பகுதிகளில் செம்மண் வளம் குறைந்துவிட்டது.  மேலும், செங்கல் சூளைக்கு பனை மரங்களை வெட்டி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செங்கம் பகுதியில் உள்ள 90 சதவீத பனை மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.  இதனால் இப்பகுதியில் மழை வளம் குறைந்துவிட்டது. 
ஏற்கெனவே, அரசின் விதைப் பண்ணைக்காக  11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டதால் செங்கம் பகுதியில் மழை வளம் குறைந்து விட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பருவ மழையில்லாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது ஒருபுறம் இருக்க, செம்மண் அதிகளவில் திருடப்பட்டது, பனை மரங்கள், புளிய மரங்கள் அழிக்கப்பட்டது போன்ற காரணங்களால் செங்கம் பகுதி தற்போது வறண்டு காணப்படுகிறது. 
மேலும், சில தினங்களில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com