மருத்துவ மாணவிக்கு ஆட்சியர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி "நீட்' தேர்வில் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி "நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்ததை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
ஆரணி அருகேயுள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நாகராஜ் மகள் தீபா. இவர், "நீட்' தேர்வில் 564 மதிப்பெண்கள் பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். 
இதைத் தொடர்ந்து, தீபாவின் பெற்றோர் நாகராஜ், தெய்வானை தங்களது ஏழ்மை நிலையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் தெரிவித்து மருத்துவக் கல்லூரியில் பயில நிதியுதவி கோரினர். இதையடுத்து, ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு தன்னார்வலர்கள் மூலம் அந்த மாணவிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தார். பின்னர், இரும்பேடு கிராமத்தில் அவர் படித்த அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாணவி தீபாவுக்கு நிதியுதவியை வழங்கி பாராட்டினார். 
பின்னர்,  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  மாணவி தீபா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அரசுப் பள்ளியில் படித்துள்ளார். மேலும், கிராமப்புறத்திலிருந்து படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.
அவரைப் பாராட்டி மருத்துவம் படிப்பதற்கான செலவை தன்னார்வலர்கள் மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம். மேலும், தொடர்ந்து படிக்க தேவைப்படும் தொகையையும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் என்றார்.
ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com