மானாவாரி வேளாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 09th August 2019 10:03 AM | Last Updated : 09th August 2019 10:03 AM | அ+அ அ- |

செய்யாறு வட்டார வேளாண்மை மையத்தில் மானாவாரி வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கோ.துரைசாமி பங்கேற்று, மணிலா சாகுபடியில் ஜிப்சம் இடுதல், களை நிர்வாகம், மண் அணைத்தல், நீர் மேலாண்மை, நுண்ணீர் பாசனம் ஆகிய தொழில்நுட்பங்களை தெரிவித்து பயிற்சி அளித்தார்.
செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.ஏஞ்சலின் பொன்ராணி, ஜல்சக்தி அபியான், மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தில் கோடை உழவு, உயிர் உரம் மற்றும் விதைகள் 50 சதவீதத்தில் மானியம், பனை மரம் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
வேளாண்மை அலுவலர் தமிழ்பரிதி கூட்டுப் பண்ணையம் குறித்தும், விதைச் சான்று அலுவலர் நடராஜ் மணிலா, உளுந்து ஆகிய பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தல் வழிமுறைகள் மற்றும் கலவன்கள் இல்லாமல் விதைப்பண்ணை சாகுபடி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் சம்பத் வேளாண் இயந்திர நவீனமயமாதல் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாலமுருகன், புகழேந்தி,
மு.பழநி ஆகியோர் நீடித்த நிலையான மானவாரி வேளாண்மை இயக்கம் இலக்கு சாதனை அடைதல் குறித்த தகவல்களை விவசாயிகளிடையே தெரிவித்தனர்.
பயிற்சியில் பெரும்பள்ளம், அருகாவூர், பாராசூர், விண்ணவாடி, வடபூண்டிபட்டு, தொழுப்பேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்துக் கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், சர்மிளாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.