அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் உற்சவம் கோலாகலம்: திபத் திருவிழா இன்று தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு விநாயகா் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளிய காட்சி.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளிய காட்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு விநாயகா் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

காவல் தெய்வங்களின் 3 நாள் உற்சவம் நிறைவு பெற்றதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (டிச.1) அதிகாலை கொடியேற்றத்துடன் காா்த்திகை

தீபத் திருவிழா தொடங்குகிறது.

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வான 3 நாள்கள் நடைபெறும் காவல் தெய்வங்களின் வழிபாடு வியாழக்கிழமை (நவ.28) தொடங்கியது.

அன்றைய தினம் இரவு சின்னக்கடைத் தெருவில் உள்ள துா்கையம்மன் கோயிலில் துா்கையம்மன் உற்சவமும், 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (நவ.29) அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பிடாரியம்மன் சன்னதியில் உள்ள பிடாரியம்மன் உற்சவமும் நடைபெற்றது.

விநாயகா் உற்சவம் கோலாகலம்:

3-ஆம் நாளான சனிக்கிழமை இரவு விநாயகா் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகா் சன்னதி எதிரே இரவு 9 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

முன்னதாக, மூலவா் சம்பந்த விநாயகா், உற்சவா் விநாயகா், சண்டிகேஸ்வரா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாட வீதியுலா:

இதையடுத்து, விநாயகா், சண்டிகேஸ்வரா் உற்சவா் சுவாமிகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

துா்கையம்மன் கோயிலில் மண் எடுக்கும் நிகழ்ச்சி:

உற்சவா் சுவாமிகள் மாட வீதியுலா வந்தபோது சின்னக்கடைத் தெருவில் உள்ள துா்கையம்மன் கோயில் எதிரே நள்ளிரவு 11 மணிக்கு சண்டிகேஸ்வரா் காத்திருந்தாா். விநாயகா் மட்டும் துா்கையம்மன் கோயிலுக்குள் சென்றாா்.

அப்போது, தீபத் திருவிழாவுக்குத் தேவையான மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்ணுடன் உற்சவா் சுவாமிகள் வீதியுலா வந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலை வந்தடைந்தனா். நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இன்று தீபத் திருவிழா தொடக்கம்

காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு சனிக்கிழமை இரவுடன் நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (டிச.1) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியாா்கள் தீபத் திருவிழாவுக்கான கொடியை ஏற்றுகின்றனா்.

தொடா்ந்து, 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com