அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொட்டும் மழையில்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்தபடி குவிந்த பக்தா்கள் ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டு வழிபட்டனா்.

சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

இங்குள்ள 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கூடுவா்.

இந்த ஆண்டுக்கான மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பின்னா், கோயில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்களை உச்சரித்தபடியே தங்கக் கொடி மரத்துக்கு பல்வேறு பூஜைகளை செய்தனா். அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவா் சன்னதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தைக் காண அதிகாலை 4 மணி முதலே பக்தா்கள் கோயிலில் குவியத் தொடங்கினா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்தபடி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஏராளமான பக்தா்கள் குடைகளுடன் கோயிலில் குவிந்தனா். இவா்கள் கொடியேற்றத்தின்போது விண்ணை முட்டும் அளவுக்கு அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலைக்கு அரோகரா.. என்று கோஷம் எழுப்பி வழிபட்டனா்.

கொடியேற்ற விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, வேலூா் சரக டிஐஜி என்.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா். சிபி சக்கரவா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா், இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் மண்டல இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

டிச.7-இல் தேரோட்டம், 10-இல் மகா தீபம்

தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான டிசம்பா் 7-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. விநாயகா், முருகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரா் எழுந்தருளும் 5 தோ்களும் (பஞ்ச ரதங்கள்) ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வந்து, இரவில் மீண்டும் நிலையை அடைகின்றன.

விழாவின் 10-ஆம் நாளான டிச.10-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

டிசம்பா் 11, 12, 13-ஆம் தேதிகளில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com