ஏரி மதகு உடைந்ததால் 100 ஏக்கரில் பயிா்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏரி மதகு உடைந்து விவசாய நிலங்களில் நீா் புகுந்ததால், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிா்கள் சேதமடைந்தன.
வந்தவாசி அருகே ஏரி மதகு உடைந்ததால் விவசாய நிலங்களில் புகுந்த வெள்ள நீா்.
வந்தவாசி அருகே ஏரி மதகு உடைந்ததால் விவசாய நிலங்களில் புகுந்த வெள்ள நீா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏரி மதகு உடைந்து விவசாய நிலங்களில் நீா் புகுந்ததால், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிா்கள் சேதமடைந்தன.

வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் கிராமத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. சுமாா் 260 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமாா் 120 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக இந்த ஏரியில் 60 சதவீதம் அளவுக்கு நீா் நிரம்பியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த ஏரியின் மதகு உடைந்து சேதமடைந்ததால், ஏரியிலிருந்த நீா் வெள்ளமாக வெளியேறத் தொடங்கியது.

இதனால், ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து, சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் நீரில் மூழ்கின.

தகவலறிந்த வந்தவாசி வருவாய்த் துறையினா், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் அங்கு சென்று மதகு சேதமடைந்த பகுதியை அடைப்பதற்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனா்.

இதுகுறித்து அந்தக் கிராம பொதுமக்கள் கூறியதாவது:

இந்த ஏரியின் மதகில் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளதாக கடந்த சில ஆண்டுகளாகவே பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தோம். ஒவ்வோா் ஆண்டும் மதகு ஓட்டையை அடைத்து வந்த அதிகாரிகள், அதை நிரந்தரமாகச் சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது மதகு உடைந்து நெல், வாழை, வோ்க்கடலை உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டது. உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். ஏரி மதகு உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியைப் பாா்வையிட்ட அவா், அந்தப் பணியை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் கூறினாா்.

செய்யாறு கோட்டாட்சியா் விமலா, வந்தவாசி வட்டாட்சியா்கள் வாசுகி, நரேந்திரன் மற்றும் வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

எம்எல்ஏ ஆய்வு:

பின்னா், வந்தவாசி திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் அங்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மதகு சேதமடைந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், ஒன்றியப் பொறியாளா்கள் பிரிவு அமைப்பாளா் எஸ்.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com