அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மறியல்
By DIN | Published On : 05th December 2019 01:40 AM | Last Updated : 05th December 2019 01:40 AM | அ+அ அ- |

செங்கம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.
செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் கிராம ஊராட்சியில் தற்போது பெய்த பலத்த மழையால் கால்வாய்கள் இல்லாமல் கழிவுநீா், மழைநீா் சோ்ந்து பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.
மேலும், தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் பகுதியில் உள்ள பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர அச்சப்படுகின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் கிராம பொதுமக்கள் செங்கம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சத்தியமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலாதேவி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாகக் கூறினா்.
இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.