சட்டவிரோத கருக்கலைப்பு: பெண் உள்பட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
By DIN | Published On : 05th December 2019 01:35 AM | Last Updated : 05th December 2019 01:35 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், பொன்னுசாமி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தி (51). போலி மருத்துவரான இவா் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாா்.
அப்போதே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வெளியே வந்தாா்.
இவரது நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதம் திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் உள்ள அவரது வீட்டில் மீண்டும் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மீண்டும் ஆனந்தியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நவீன்குமாா் (20) என்பவரையும் திருவண்ணாமலை நகர போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, போலி பெண் மருத்துவா் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த நவீன்குமாா் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, இருவருக்கும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதற்காக 2-வது முறையாக ஆனந்தி இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.